Tuesday 30 December 2014

கந்தர்வக்கோட்டை அருகில் சோழர் காலத்து நந்தி, சிவலிங்கம் தஞ்சை தமிழ்ப் பண்டிதர் தகவல்

தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில், நாட்டாணி கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சரஸ்வதி மஹால் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் கூறியதாவது:

தஞ்சையில், கோட்டைச்சுவரின், நீர் அரணாகத் திகழும் அகழியுடன் கூடிய கோநகரமாக திகழ்ந்தது வல்லம். வல்லத்தின் புறநகர் பகுதியாக விளங்கிய ஊர் நாட்டாணிம். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், வல்லத்தை கடந்து தென்புறமாக பிரிந்து செல்லும் சாலையில், நாட்டாணி உள்ளது. 

இவ்வூரின் மேற்கில் படத்தாளத்தியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திடலிலிருந்து, சில மீட்டர் தொலைவில், காட்டுப்பகுதிக்குள் சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் காணப்படுகிறது. அம்மன் கோவில் அருகே, சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இவையும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி, சங்க காலம் முதல், பிற்கால சோழர்களின் காலம் வரை மிகவும் சிறப்புற்று திகழ்ந்திருக்க வேண்டும். இங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் கோவில் முழுவதும் அழிவுற்று, இந்த நந்தியும், சிவலிங்கமும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 20.10.2014

Monday 29 December 2014

ஆதீண்டு குற்றி

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தன. இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வந்தனர். ஆடுகளை புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம், நல்லினம் என்றும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. அஃறிணை உயிர்களின் உணர்வினை மதித்து அவைகளுக்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லுக்கு தமிழ் இலக்கியத்தில் "ஆதீண்டு குற்றி' என்று பெயர் வழங்கப்பட்டது.

மனிதர்கள் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும்பொழுது கையால் சொறிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகளுக்குத் தினவு ஏற்படும்பொழுது அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவைப் போக்கிக்கொள்ள முற்படும். மாடுகள் அடிக்கடி உராய்வதால் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாகவும், அவ்வுயிர்களின் உணர்வினை மதிக்கும் விதமாகவும் தொல் பழங்காலந்தொட்டு, ஆடு, மாடுகள் தினவைப்போக்க பலகைக் கற்களையும், குத்துக்கற்களையும், மரக்கட்டைகளையும் நட்டுள்ளனர். இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இதற்காக நடப்படும் கற்களை ஆதீண்டு குற்றி, மாதீண்டு குற்றி என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. இன்று மாடுரசு கல் என அழைக்கப்படும் ஆதீண்டு குற்றி பற்றி இலக்கியங்கள் கூறுவதைக் காண்போம்.

சேந்தன் திவாகரத்தில், முப்பத்திரண்டு அறத்தின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. அவற்றுள் ஆவுரிஞ்சு நடுதறி அமைப்பது அறச்செயலாகப் போற்றப்படுகின்றது.
சீவக சிந்தாமணியின்,

பூத்த கோங்கு போற்பொன் சுமந்துளா
ராய்த்தியர் நலக்கா செறூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினன்

எனும் செய்யுளுக்கு உ.வே.சா., எழுதியுள்ள விசேடக் குறிப்பில், "கோங்க மலர்கள் பொன்னிறமுடையவை. ஆதீண்டு குற்றி தினவைப்போக்கிக் கொள்ளுதற் பொருட்டுப் பசுக்கள் உரிஞ்சுக் கொள்ளுதற்கு நாட்டப்பட்டுள்ள கட்டை' என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,


சதுக்கமுந் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண் தலைத்கொடியொடு மண்ணி யமைவர
(225-227)

இதன் பொருள் கூறுமிடத்து "கந்துடை நிலையினும் ஆதீண்டு குற்றியையுடைய இடத்திலும்' என்கின்றது. இதனையே தமிழ் லெக்சிகன் "கந்து' எனும் சொல் ஆதீண்டு குற்றியைக் குறிப்பதாகச் சொல்கின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வகை ஆதீண்டு குற்றிகள் வழக்கில் இருந்ததை உரையாசிரியர்களின் உரைக்குறிப்பால் அறியமுடிகின்றது.
ஆதீண்டு குற்றி பசுக்கள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்தாலும், பிற விலங்குகளும் உராய்ந்து கொள்ள பயன்பட்டது என்கிறார் சேனாவரையர் (தொல்,சொல். 49 மேற்கோள் உரை). சேனாவரையனாரின் உரைக்கு வலு சேர்ப்பது போல் ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக்கொண்டன என்பதை சங்க இலக்கியக் குறிப்புகளால் அறியமுடிகின்றது.

 குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
(ஐங்குறு.277:1-2)
 
விலங்குகள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்த கல் மாதீண்டு துறுகல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது தெரிய வருகின்றது. "ஆவுரிஞ்சு' என்னும் சொல்லாட்சி திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலத் தலமகிமைச் சருக்கத்தில் (37) குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருத்ததற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இக் கல்வெட்டுகளின் காலம் கி.பி.13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இதில் தன்மத்தறி என்றே ஆதீண்டு குற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் "தர்மத்திற்காக நடப்பட்டுள்ள கல்' என்பதாகும். இதனை நிறுவியவர்கள் பெயர்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாடுகள், யானைகள் போன்ற விலங்கினங்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் குட்டைகள் ஏற்படுத்தியிருந்தமை போன்று, மாடுகள் தங்கள் உடல் அரிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல் நட்டுள்ள முன்னோர்களின் மாண்பு போற்றுதலுக்கு உரியதன்றோ!


(மணி. மாறனின் "தமிழ் ஆய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து..)


நன்றி : தினமணி, தமிழ்மணி, 30.11.2014

பூதலூர் அருகே 10ம் நூற்றாண்டு சோழர் கால கோவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து, 25 கி.மீ., தொலைவில், பூதலூர் அருகில் அமைந்துள்ளது ஐம்பது மேல்அகரம். இங்கு, சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் ஆய்வு செய்த போது, பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இடிந்து போன கோவிலில் சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிற்பங்களைக் கண்டறிந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:
சோழர் காலத்தில், வளநாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய வீரசிகாமணி ஏரியின் வட கரையில், ஐம்பதுமேல் அகரம் அமைந்துள்ளது. பராந்தக சோழன் காலத்தில் இந்த ஏரியை, புத்தாமூர் கனகசேனப்பிடாரன் என்ற சமணப்பள்ளியைச் சேர்ந்தவர் பராமரித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் காலத்தில், அவரது படைத்தளபதியாக விளங்கிய ஜெயமூரி நாடாள்வான் என்பவர், இப்பெரும் ஏரியைப் பராமரிக்கும் அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற வீரசிகாமணி பேரேரி, இன்று பரப்பளவில் சுருங்கி, சிறு குளமாக காணப்படுகின்றது. மேலும், 15ம் நூற்றாண்டில் சாளுவத் திருமலைத்தேவ மகாராஜர் சோழ மண்டலத்தில், விஜயநகரப் பேரரசின் மகா மண்டலேஸ்வரராக இருந்தார். இவரது கல்வெட்டுகள் தஞ்சை, நாகை மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த சாசனம் சில கிராமங்களில் வசூலிக்கப்படும் வரியைத் தவிர்த்து, அவற்றை இறையிலி கிராமங்களாக அறிவித்ததைத் தெரிவிக்கிறது. ஐம்பதுமேல்அகரத்தில், கி.பி., 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய சிவாலயம் உள்ளது. காலபோக்கில் அழிவுற்று, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர், தனித்த சிவலிங்க பானம் போன்றவை காணப்படுகிறது. ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், நான்கடி உயரத்தில் வெள்ளை நிறக் கல்லில் அமைந்துள்ளது. விநாயகர் சிற்பம், மூன்றரையடி உயரத்தில், துதிக்கை சிதைந்த நிலையில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம், மிகவும் சிதிலமுற்ற நிலையில் கோவிலின் சுவர் அருகே கிடக்கிறது. கற்றளியாக இருந்த கோவில் அழிவுற்றதால், 15ம் நூற்றாண்டில் செங்கல் கட்டுமானமாகப் புதுப்பிக்கப்பட்டு, வழிபாட்டில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதுவும் இடிந்திருக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 26.11.2014

கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்

தஞ்சாவூரிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாகக் கல்லணைக்குச் செல்லும் வழியில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமையான தடுப்பணை அமைந்துள்ள கச்சமங்கலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இந்த அணையை வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் தெரிவித்தது:
இந்தப் பகுதியில் வெண்ணாறு 2000 ஆண்டுகளாக ஓடி வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் படகுகளில் ஏற்றப்பட்டு எள்ளுப்பொதிகள் கொண்டு செல்லப்பட்டதை வெண்ணுக்கரை எள்ளுப்பாறு எனத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெண்ணாற்றில் கச்சமங்கலம் என்ற ஊரில் இயற்கையாக அமைந்த மலையின் பாறை வெட்டப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவுக்குப் பாறைகள் வெட்டப்பட்ட வழியிலேயே வெண்ணாறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆற்றின் போக்கில் அமைந்த ஒரத்தூர் வரை இந்தப் பாறைகளைக் காணலாம். இதிலிருந்து முற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் நேரிமலை பிளக்கப்பட்டு வெண்ணாற்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கல்லணைக் கால்வாயில் பூதலூரின் மேற்கே தொடங்கி தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பகுதி வரை 23 கி.மீ. தொலைவுக்கு உள்ள பாறைகள் நவீன இயந்திரங்களைக் கொண்டு பிளக்கப்பட்டு நீர் வழி உருவாக்கப்பட்டுள்ளது.

நற்றிணை, குறுந்தொகை பாடல்களாலும், சேந்தன் வெளியிட்ட காசுகளாலும், உ.வே.சா. மற்றும் சிவக்கொழுந்து தேசிகர் குறிப்புகளாலும் இப்பகுதியில் இருந்த மலை உடைக்கப்பட்டு வெண்ணாறு செல்வதை அறிய முடிகிறது.
நேரிமலை தற்போது வெண்ணாற்றின் போக்கில் கச்சமங்கலம், மாறனேரி, ஒரத்தூர் உள்ளிட்ட ஊர்களில் ஒரு காலத்தில் அமைந்திருந்த மலை. வெண்ணாறு ஓடிக்கொண்டிருக்கும் அம்மலையின் தரைமட்ட பகுதியை மட்டுமே இன்று காண முடிகிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி திருசடை முடிநாதர் கோயிலில் (சடையார் கோயில்) ரூ. 31.70 லட்சத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைப் பாதுகாப்பில் உள்ள இக்கோயில் தொல்லியல் நினைவுச் சின்னமாக உள்ளது. இக்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணைக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

அங்கு வந்து செல்கிற சுற்றுலா பயணிகள் திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடிநாதர் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் இப்பகுதி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகரன், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக் காப்பாட்சியர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி தினமணி 19.12.2014

Monday 21 July 2014

சோழர் காலத்து உறை கிணறு கண்டுபிடிப்பு


 Photo: சோழர் காலத்து உறை கிணறு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில் தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில் உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது: சோழர்கள் காலத்தில் நீர்மேலாண்மைச் செயல்பாடுகள் உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை கலிங்குகள் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

நீர் வற்றிய கோடைக்காலங்களில் இக்கிணறுகளிலிருந்து நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும் தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும் கிணறுகள் இருப்பதைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில் கால்வாயின் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாழக்குடி பகுதியில் வெட்டாற்றில் சோழர் காலத்திய உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின் இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது சோழர் காலத்திய கட்டுமான தொழில்நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை ஆற்றில் மணல் அற்றுப்போனதால் நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில் தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில் உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது: சோழர்கள் காலத்தில் நீர்மேலாண்மைச் செயல்பாடுகள் உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை கலிங்குகள் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

நீர் வற்றிய கோடைக்காலங்களில் இக்கிணறுகளிலிருந்து நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும் தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும் கிணறுகள் இருப்பதைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில் கால்வாயின் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாழக்குடி பகுதியில் வெட்டாற்றில் சோழர் காலத்திய உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின் இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது சோழர் காலத்திய கட்டுமான தொழில்நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை ஆற்றில் மணல் அற்றுப்போனதால் நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி தினகரன், 15.7.2014


தஞ்சை அருகே சோழர் காலத்து உறைகிணறு வெட்டாற்றில் கண்டெடுப்பு, தினத்தந்தி, 15.7.2014
வெட்டாற்றில் சோழர்கள் கால உறைகிணறுகளின் தடம், தினமலர், 15.7.2014 
சோழர் காலத்து உறைகிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு, காலைக்கதிர், 15.7.2014
சோழர் கால உறை கிணறு, சுடுமண் குழாய்கள், தி இந்து, 16.7.2014
Ancient well, clay pipes unearthed in river bed, The New Indian Express, 16.7.2014

Monday 5 May 2014

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் "சதயவிழா' தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம்

தஞ்சாவூர்: "ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து, சைவம் தழைக்க பாடுபட்ட அப்பர் பெருமானுக்கு, தஞ்சை அருகே ஒரு சிற்றூரில் அவர் முக்தி பெற்ற தினமான, சித்திரை சதய நாளில் இப்போதும் குருபூஜை நடப்பது வியப்புக்கும், பெருமைக்கும் உரிய தகவல்' என, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியுள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதரும், ஆய்வாளருமான மணிமாறன் கூறியதாவது:
மருள் நீக்கியார், தாண்டக வேந்தர் என, அப்பர் பெருமான் பல பெயரில் அழைக்கப்படுகிறார். வடக்கே திருவண்ணாமலையும், தெற்கே கொள்ளிடமும், கிழக்கே கடலும், மேற்கே மலைகளுமாக திருமுனைப்பாடி நாடு பரந்து விரிந்திருந்தது. இந்நாடு, சோழநாட்டுக்கும், தொண்டை நாட்டுக்கும் இடையில் இருந்ததால், நடுநாடு எனவும் அழைக்கப்பட்டது.

திருமுனைப்பாடி நாட்டை முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்கள் ஆண்டனர். அதனால், முனைப்பாடி என்னும் பெயர் வந்தது. திருவதிகையிலுள்ள மூன்றாம் நந்திவர்மன் மகன் நிருபதுங்கனின் 16ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில், முனைப்பேரரையர் முனையர்கோன் இளவரையன் என்னும் தொடர் உள்ளது. நடுநாட்டின் ஒரு பகுதிதான் முனைப்பாடி நாடு என, மற்றொரு கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.
சோழமன்னர்களில் ராசேந்திர சோழன் முதல் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டுக்களில் இந்நாடு குறித்து, குறிப்புகள் பல கிடைக்கிறது. இதன்படி, பலவகையிலும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டிலுள்ள ஒரு ஊர் தான் திருவாமூர்.
இங்கு, வேளாளர் சமூகத்தை சேர்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அப்பர் பெருமான். அப்பர் பெருமான் பாடியவை 4,5,6ம் திருமுறைகளாக தொகுத்தும், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு எனவும், சுந்தரர் பாடல்கள் திருப்பாட்டு எனவும் அழைக்கப்பட்டு, மூவர் பாடலும் தேவாரம் ஆனது.
நட்சத்திரங்களை கொண்டு, பிறந்தநாள் எடுப்பதும், மறைந்தோர் நினைவாக வழிபாடு செய்வதும் மரபாக முன் இருந்து வந்தது. தற்போதுதான் தேதியை கொண்டு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் நிலவுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன், தொண்டியில் சேரமன்னன் கோக்கோதை மார்பன் தன் பிறந்தநாளை சதய நட்சத்திரத்தில் கொண்டாடினார் என, பழம்பாடல் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன், தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜசோழன் (கி.பி.,985-1014) ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாடினார்.

சோழநாட்டை ஆண்ட ராஜராஜனுக்கு தஞ்சையில் மட்டும் தான் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால், அப்பர் பெருமானுக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் குருபூஜை விழா எடுக்கப்படுகிறது.

அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில், அப்பர் குருபூஜை விழா நடக்கிறது. பல்வேறு தலங்களுக்கு சென்று அப்பர் பெருமான் பாடியுள்ளார். அத்தலங்களில் விழா கொண்டாடுவது இயல்பு.

ஆனால், அப்பருக்கு எவ்வகையிலும் தொடர்பே இல்லாத, தஞ்சையை அடுத்துள்ள ஒரு சிற்றூரில் கடந்த 85 ஆண்டாக, குருபூஜை விழா நடப்பது வியப்புக்கும், பெருமைக்குரியது.

தஞ்சையில் இருந்து மேற்கே பூதலூர் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் மேலவெளி பஞ்.,க்கு உள்பட்ட களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இங்கு, குருபூஜை நாளில், 300 ஆண்டு பழமைவாய்ந்த அப்பர் ஓவியத்தை மலர்களை கொண்டு அலங்கரித்து, திருத்தேரில் அதை வைத்து கிராம மக்கள் தாமே முன்வந்து, வீதியுலாவை இப்போதும் நடத்துகின்றனர்.

இவ்வாறு, ஆய்வாளர் மணிமாறன் கூறினார்.

Wednesday 23 April 2014

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
தஞ்சை, ஏப் 24, தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் பெருமான் சதய விழா வரும் 25ம்தேதி முதல் 3 நாட்களுக்கு தஞ்சை களிமேட்டில் நடைபெற உள்ளது.

 மாமன்னன் ராஜராஜனுக்கு தஞ்சையில் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அப்பர் பெருமானுக்கோ திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா எடுக்கப்பட்டு வருகிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்ததாக கருத்து நிலவுகிறது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குரு பூஜை நடைபெறுகின்றது. பல்வேறு தலங்களுக்கு சென்று பாடல்களைப் பாடியுள்ள அப்பர் பெருமானுக்கு அந்தந்தத் தலங்களில் விழா கொண்டாடுவது சிறப்பான ஒன்றாகும். ஆனால் அவரோடு தொடர்பில்லாத ஒரு சிற்றூரில் கடந்த 85 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெறுகின்றது.
தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு என்னும் கிராமத்தில் விழா இப்போதும் நடக்கிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வட கரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன், உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது.  இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான ஓவியம். குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி மக்கள் வணங்குகின்றனர்.
இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இவ்வூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் 86ஆம் ஆண்டு சித்திரை சதய விழா 25, 26, 27.4.2014 மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிகமான ஊர்களில் மடங்கள் நிறுவப்பெற்றது அப்பருக்கு மட்டுமே என சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் தெரிவித்தார். 
நன்றி : தினகரன், 24.4.2014

Monday 7 April 2014

தமிழறி மடந்தை கதை

"மச்சான், நான் எங்கப் போனாலும் கண்டுபிடிச்சு வந்துடுவியா?" என்ற அவளுடைய கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அவன், "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீ போனாக்கூட நான் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்துடுவேன்" என்பது போன்ற நெஞ்சத்தில் நினைவுகளைத் தேக்கிவைத்துள்ள உணர்வுபூர்வமான கதைகளையும், "ராஜாவோட உயிரு உயரத்துல மலை மேல இருக்கிற குகையில இருக்கிற பொந்துக்குள்ள கிளியோட கழுத்துல இருக்காம்" என்று ஆர்வத்தையும் அதிசயத்தையும் நம்முள் உண்டாக்கும் கதைகளையும் இளம் வயது முதலே நாம் கேட்டு வளர்ந்து வந்துள்ளோம். அவை நம்மை நன்னெறிப்படுத்துவதோடு, நல்ல வாழ்விற்குத் துணையாக அமைகின்றன. ஒரு  செய்தியை நேரடியாகச் சொல்வதற்கும் கதையாகச் சொல்வதற்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. கதையாகச் சொல்லும் நிலையில் மனதில் பெரும் தாக்கத்தை உணரமுடியும். அவ்வாறான ஒரு வகை கதைதான் மணி.மாறனின் தமிழறி மடந்தை கதை.


 கதை
அளகாபுரி மன்னனான அளகேஸ்வரனின் மகள் ஏலாங்குழலாள்.  பாடலிபுத்திர அதிபதியான பத்திரகிரியின் மகன் சந்தனகுமாரன். படிப்பில் ஈடுபாடின்றி வீட்டைவிட்டு வெளியேறிய அவன், ஏலாங்குழலாளைக் கண்டு தன் மனதைப் பறி கொடுக்கிறான். அவளும் தன் மனதை பறி கொடுக்கிறாள். அவள் தன் எண்ணத்தை அவனிடம் வெளிப்படுத்த எடுக்கும் முயற்சி தோற்று, இருவரும் ஒன்றுசேரா நிலை ஏற்படுகிறது. அரசகுமாரி தன் உயிரை மாய்த்துக்கொள்ள, அதையறிந்த அரசகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான்.  இதிலிருந்து அவர்களுடைய மறுபிறவி கதை தொடங்குகின்றது.மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வந்து நம் மனதில் பதிந்துவிடுகின்றனர். 
அற்ப ஆயுளில் இறந்த இளவரசியும், இளவரசனும் சாவடியில் இருந்துகொண்டு அங்கு வருபவர்களைத் தங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டுவந்தபோது ஔவையார் வந்து தங்குகிறார். பேய் வடிவில் வந்த அவர்களிடம் கதையைக் கேட்ட ஔவையார் அவர்கள் வாழ்ந்த விதத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பின்னர் ஔவையார், உறையூரில் கரிகாற்சோழனிடம் இருக்கும் பன்னீராயிரம் பெண்களில் முதல்வியான மரகதவடிவுக்கு மகளாகப் பிறக்கப்போவதையும், அவளுக்கு மன்னன் தமிழறி மடந்தை எனப் பெயர் சூட்டப்போவதையும் கூறுகிறாள். பின் நடக்கவிருப்பனவற்றையும் ஔவையார் கூறுகிறாள். இவ்வாறாகக் கதையின் போக்கு அமைகின்றது.ஔவையாரின் வாக்குப்படி அவர்களுடைய வாழ்வு அமைந்ததா என்பதும், அவ்வாழ்வினை எதிர்கொள்ள நிகழ்ந்த நிகழ்வுகளும் கற்பனை நயத்தோடு மனதில் பதியும் வகையில் மிகவும் சிறப்பாக தரப்பட்டுள்ளன.

வர்ணனையும் கற்பனையும்
அவளுக்கான அரண்மனை பற்றிய வர்ணனை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. அந்த அரண்மனையில் ஏழு மாடியும், அறுபத்து நான்கு வாசலும் இருப்பது பற்றியும் அந்த ஒவ்வொரு வாசலுக்கும் இருக்கும் சிறப்பு மற்றும் புதுமை பற்றியும் கூறப்பட்டுள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. (ப.14)

சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்றுவிட்டு தமிழறி மடந்தை வருவதைப் படிக்கும்போது நாமும் அங்கே அவளை எதிர்கொண்டு அழைப்பதை போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. "...இவள் தமிழறி மடந்தை என்னும் பெயர் கொண்டு, முன்னர் ஔவையார் கூறியதுபோல் சோழ மாமன்னனால் சகல வசதிகளும், நன்மைகளும் பெற்று, வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒர நாள் பச்சை பல்லக்கின் மீது ஏறிக்கொண்டு பனிரெண்டாயிரம் பெண்களும் தொழுதுவர, பகலில் பந்தம் பிடிக்க, வெண் சாமரம் வீச தோழிமார்கள் இரண்டு பக்கத்திலும் தாவிக்கொண்டு வர கட்டியக்காரர் கட்டியங்கூறி எச்சரிக்கை செய்ய, பதினெட்டு மேள வாத்தியங்கள் முழங்க, தும்புரு வீணை, கின்னரி, இராவணாதிரம், குடமுழர் போன்ற பலவித சங்கீதம் முழங்கிவர, மிகவும் அழகு நிரம்பிய அவள் பவனி வருவதைக் கண்ட இளைஞர்கள் எல்லாம் மூர்ச்சையாய் விழுந்திட சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்று அங்கே அவர் முகம் பெற்றுத் திரும்பி வருகின்றாள்....." (ப.20)

நூல்முழுவதும் இவ்வாறான நிகழ்வுகள் நம் கண் முன் நடப்பதைப் போல காட்டப்பட்டுள்ள விதம் படிப்பவர் மனதில் தங்கிவிடும்.   

நடக்கும் நிகழ்வுகள் வெண்பா வடிவில் தரப்பட்டு உரிய விளக்கங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

தூக்கம் நீங்கி ஔவையார் அருளிச்செய்த வெண்பா.

வெண்பாவிருக்காலிற் கல்லானை வெள்ளோலைக்
கண்பார்த்துக் கையாலெழுதானைப் - பெண்பாவி
பெற்றாளோ பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளோ
பெற்றோமற் றெற்றோமற் றெற்று.

இதனைக் கேட்டு அது கல்வி கற்ற பேயானதால் இந்தக் கல்வியின் பொருளை அறிந்துகொண்டு நம்முடைய பூர்வோத்திரம் எல்லாம் அறிந்து சொன்ன இவள் தேவியே என்று பயந்து சென்றது. (ப.8)

நக்கீர தேவர் வாழைத்தண்டை விறகாகக் கட்டிக் கொண்டு சமூகச்சாலையில் போய் முதல் கட்டு வாசலிலே கற்றுச் சொல்லிப் பெண்கள் இருப்பதைக் கண்டு பிறகு விலை கூறின வெண்பா.

வெய்யோன்கதிரெரிப்ப வேற்கண்ணாள்பிற்றொடரப்
பையவருதென்றற் பயனறியேன்-துய்ய
மலர்த்தடங்கண் வாய்ந்த மயிலனையீர் கொள்வீர்
விலைக்குவிறகோ விறகு.

இதனைக் கேட்ட கற்றுச்சொல்லிப் பெண்கள் இதுநாள் வரையில் நம் நாச்சியாருக்கு எதிராளி யாரும் வந்து நம்மிடம் கவி சொன்னதில்லையே, என்று வியக்கின்றனர். (ப.44)

தமிழறிவானவளுக்கும் நக்கீரருக்கும் நடக்கும் விவாதம் வெண்பா, சந்தவிருத்தம், கவி என்ற நிலைகளில் யார் வெற்றி பெறப் போகின்றார்களோ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதுடன் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அவற்றைப் படிக்கும்போதுதான் உணரமுடியும். 

சொல்லுக்கான பொருள்
புதிய சொற்களுக்கு பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆவேசம்-பேய் (ப.7),  அநத்தல்-தூக்கம் (ப.8), அரதேசி-உள்நாட்டைச் சேர்ந்த யாசகன் (அகதேசி, அரதேசி என மருவியது) (ப.16), மொண்ணச்சிகள்-திருநங்கைகளாக இருக்கலாம் (ப.29), சமூகச்சாலை-வாசல்(ப.44), ஆகடியம்-கிண்டல் (ப.57),  அஸ்தகடகம்-கைவளையல் (ப.69), மொத்தார்த்தமாக-மலுப்பலாக (ப.86), பூராயமாய்-ஆராய்ந்து (ப.89)

கதை கேட்பது, படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்ததேயாகும். இவ்வாறான பல சிறப்புக்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த நூலைப் படிப்போமே. வாசிப்பை நேசிப்போமே.

தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி.மாறன் (9443476597), தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013, ரூ.80

நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்




சிதிலமடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா

தஞ்சாவூர்,
தஞ்சை அருகே சிதிலம்அடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சோழர்கால கல்வெட்டு
தஞ்சையை அடுத்த செந்தலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊர் கருப்பூர் ஆகும். இவ்வூர் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்கால கல்வெட்டில் ஆர்க்காட்டுக்கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்திய ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்துள்ள ஊர்களின் வரலாறு குறித்த ஆய்வு மேற்கொண்டு வரும் தஞ்சை சரசுவதிமகால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியதாவது:-

பல்லவர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய இப்பகுதி சோழர்காலத்திலும் சிறப்போடு திகழ்ந்தது. கி.பி. 985-ல் இருந்து கி.பி.1014 வரை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் சோழமண்டலத்தை பல்வேறு வளநாடுகளாக பிரிந்தான். அவற்றுள் தஞ்சாவூர் கூற்றம் உள்ளிட்ட 21 நாடுகளிலும் கூற்றங்களிலும் இடம்பெற்ற ஒரு வளநாடாக பாண்டிய குலாசனி வளநாடு திகழ்ந்தது. இந்த வளநாட்டில் இடம் பெற்ற ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்த ஒரே ஊர் ராஜராஜன் காலத்தில் மீபிரம்பில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊராகும். இந்த ஊரில் நெடுஞ்சாலையை ஒட்டி சிதைவுற்று அழியும் நிலையில் மீனாட்சி சுந்தரேசர் கோவில் உள்ளது.

சிவாலயம்
கி.பி.1311-ல் தமிழகம் நோக்கி பெரும்படையினரோடு வந்த மாலிக்காபூர் படையினரால் இப்பகுதியில் அமைந்திருந்த பல கோவில்கள் தாக்குதலுக்கு ஆளாயின. பின்வந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் செந்தலை சிவன்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக கருப்பூர் சிவாலயம், நியமம் காளாபிடாரிகோவில், அமண்குடி சமணக்கோவில் ஆகியவற்றின் இடிபாடுற்ற பகுதிகள் எடுத்து வரப்பட்டு செந்தலை கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மதில், மண்டபங்கள் ஆகியவை எடுத்து கட்டப்பட்டன. இதனாலேயே செந்தலை கோவில் கோபுரத்திலும், மதிலும், மண்டபங்களிலும் மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாதனங்களை இன்றும் நாம் காணமுடிகிறது. அவற்றுள் ஓர் கல்வெட்டு சாதனம் செந்தலை சுந்தரேசுவரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள மதில் பகுதியில் உள்ளது. இந்த சாசனத்தில் ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்புரான மீபிரம்பில் என்னும் சொல்லாட்சி காணப்படுகிறது.

கி.பி.15-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் ஆதிக்கத்தில் இந்த பகுதி வந்தது. இந்த காலத்தில் சோழமண்டலம், தொண்டைமண்டலம் ஆகிய 2 பகுதிகளுக்கும் ஆட்சியாளனாக திகழ்ந்தவன் கோனேரிதேவமகாராயன் ஆவான். கி.பி.1485-ல் தொடங்கி கி.பி.1495 வரை இவனுடைய ஆட்சி நீடித்தது. இந்த மன்னனின் இயற்பெயர் வைத்தியநாத காலிங்கராயன் என்பதாகும். திருவையாறுக்கு அருகில் வைத்தியநாதன்பேட்டை எனும் ஒரு ஊர் உள்ளது. கொள்ளிட ஆற்று கரையில் உள்ள திருமழபாடியில் தன் பெயரால் கோனேரிராயன் திருமணமண்டபம் என்றதோர் மண்டபத்தை படைத்தான்.

பிற்கால ஓவியம்
மன்னனின் பெயரால் மீபிரம்பிலான கருப்பூரின் ஒரு பகுதிக்கு கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இங்கு திகழும் கற்றளியான கோனேரிராஜபுரத்து சிவாலயம் சோழர்கள் காலத்தில் எட்டு பரிவாரங்களுடன் திகழ்ந்த சிறந்த கோவிலாக விளங்கியது. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஊரில் அமைந்துள்ள சோழர் காலத்திய சிவாலயம் இன்று மிகப்பெரும் மரம் வளர்ந்து மிகவும் சிதிலமுற்று காணப்படுகிறது. சிதிலமடைந்த இந்த கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் அமைந்துள்ள கட்டுமானத்தை சுற்றிலும் விஜயநகர மன்னர்கள் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் போர்வீரனின் சிற்பங்கள் மிக சிறிய அளவில் 12 செ.மீட்டர் வட்டத்திற்குள் செதுக்கப்பட்டுள்ளது.

போர் செய்யும் வீரனின் பல்வேறு நிலைகள் இந்த சிறிய சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலின் கருவறையில் சோழர்காலத்து சிவலிங்கமும், அருகில் மற்றொரு சன்னதியில் சோழர் காலத்து அழகிய அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. கருவறையின் உட்சுவரில் பிற்காலத்திய ஓவியம் அமைந்துள்ளது. சிதிலமடைந்துள்ள சிறப்புவாய்ந்த இந்த கோவில் பாதுகாக்கப்பட்டால் எதிர்கால வரலாற்றுக்கு பயனுடையதாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி. தினத்தந்தி 11.3.2014