Monday 7 April 2014

சிதிலமடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா

தஞ்சாவூர்,
தஞ்சை அருகே சிதிலம்அடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சோழர்கால கல்வெட்டு
தஞ்சையை அடுத்த செந்தலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊர் கருப்பூர் ஆகும். இவ்வூர் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்கால கல்வெட்டில் ஆர்க்காட்டுக்கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்திய ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்துள்ள ஊர்களின் வரலாறு குறித்த ஆய்வு மேற்கொண்டு வரும் தஞ்சை சரசுவதிமகால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியதாவது:-

பல்லவர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய இப்பகுதி சோழர்காலத்திலும் சிறப்போடு திகழ்ந்தது. கி.பி. 985-ல் இருந்து கி.பி.1014 வரை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் சோழமண்டலத்தை பல்வேறு வளநாடுகளாக பிரிந்தான். அவற்றுள் தஞ்சாவூர் கூற்றம் உள்ளிட்ட 21 நாடுகளிலும் கூற்றங்களிலும் இடம்பெற்ற ஒரு வளநாடாக பாண்டிய குலாசனி வளநாடு திகழ்ந்தது. இந்த வளநாட்டில் இடம் பெற்ற ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்த ஒரே ஊர் ராஜராஜன் காலத்தில் மீபிரம்பில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊராகும். இந்த ஊரில் நெடுஞ்சாலையை ஒட்டி சிதைவுற்று அழியும் நிலையில் மீனாட்சி சுந்தரேசர் கோவில் உள்ளது.

சிவாலயம்
கி.பி.1311-ல் தமிழகம் நோக்கி பெரும்படையினரோடு வந்த மாலிக்காபூர் படையினரால் இப்பகுதியில் அமைந்திருந்த பல கோவில்கள் தாக்குதலுக்கு ஆளாயின. பின்வந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் செந்தலை சிவன்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக கருப்பூர் சிவாலயம், நியமம் காளாபிடாரிகோவில், அமண்குடி சமணக்கோவில் ஆகியவற்றின் இடிபாடுற்ற பகுதிகள் எடுத்து வரப்பட்டு செந்தலை கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மதில், மண்டபங்கள் ஆகியவை எடுத்து கட்டப்பட்டன. இதனாலேயே செந்தலை கோவில் கோபுரத்திலும், மதிலும், மண்டபங்களிலும் மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாதனங்களை இன்றும் நாம் காணமுடிகிறது. அவற்றுள் ஓர் கல்வெட்டு சாதனம் செந்தலை சுந்தரேசுவரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள மதில் பகுதியில் உள்ளது. இந்த சாசனத்தில் ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்புரான மீபிரம்பில் என்னும் சொல்லாட்சி காணப்படுகிறது.

கி.பி.15-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் ஆதிக்கத்தில் இந்த பகுதி வந்தது. இந்த காலத்தில் சோழமண்டலம், தொண்டைமண்டலம் ஆகிய 2 பகுதிகளுக்கும் ஆட்சியாளனாக திகழ்ந்தவன் கோனேரிதேவமகாராயன் ஆவான். கி.பி.1485-ல் தொடங்கி கி.பி.1495 வரை இவனுடைய ஆட்சி நீடித்தது. இந்த மன்னனின் இயற்பெயர் வைத்தியநாத காலிங்கராயன் என்பதாகும். திருவையாறுக்கு அருகில் வைத்தியநாதன்பேட்டை எனும் ஒரு ஊர் உள்ளது. கொள்ளிட ஆற்று கரையில் உள்ள திருமழபாடியில் தன் பெயரால் கோனேரிராயன் திருமணமண்டபம் என்றதோர் மண்டபத்தை படைத்தான்.

பிற்கால ஓவியம்
மன்னனின் பெயரால் மீபிரம்பிலான கருப்பூரின் ஒரு பகுதிக்கு கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இங்கு திகழும் கற்றளியான கோனேரிராஜபுரத்து சிவாலயம் சோழர்கள் காலத்தில் எட்டு பரிவாரங்களுடன் திகழ்ந்த சிறந்த கோவிலாக விளங்கியது. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஊரில் அமைந்துள்ள சோழர் காலத்திய சிவாலயம் இன்று மிகப்பெரும் மரம் வளர்ந்து மிகவும் சிதிலமுற்று காணப்படுகிறது. சிதிலமடைந்த இந்த கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் அமைந்துள்ள கட்டுமானத்தை சுற்றிலும் விஜயநகர மன்னர்கள் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் போர்வீரனின் சிற்பங்கள் மிக சிறிய அளவில் 12 செ.மீட்டர் வட்டத்திற்குள் செதுக்கப்பட்டுள்ளது.

போர் செய்யும் வீரனின் பல்வேறு நிலைகள் இந்த சிறிய சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலின் கருவறையில் சோழர்காலத்து சிவலிங்கமும், அருகில் மற்றொரு சன்னதியில் சோழர் காலத்து அழகிய அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. கருவறையின் உட்சுவரில் பிற்காலத்திய ஓவியம் அமைந்துள்ளது. சிதிலமடைந்துள்ள சிறப்புவாய்ந்த இந்த கோவில் பாதுகாக்கப்பட்டால் எதிர்கால வரலாற்றுக்கு பயனுடையதாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி. தினத்தந்தி 11.3.2014

No comments:

Post a Comment