Monday 29 December 2014

கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்

தஞ்சாவூரிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாகக் கல்லணைக்குச் செல்லும் வழியில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமையான தடுப்பணை அமைந்துள்ள கச்சமங்கலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இந்த அணையை வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் தெரிவித்தது:
இந்தப் பகுதியில் வெண்ணாறு 2000 ஆண்டுகளாக ஓடி வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் படகுகளில் ஏற்றப்பட்டு எள்ளுப்பொதிகள் கொண்டு செல்லப்பட்டதை வெண்ணுக்கரை எள்ளுப்பாறு எனத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெண்ணாற்றில் கச்சமங்கலம் என்ற ஊரில் இயற்கையாக அமைந்த மலையின் பாறை வெட்டப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவுக்குப் பாறைகள் வெட்டப்பட்ட வழியிலேயே வெண்ணாறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆற்றின் போக்கில் அமைந்த ஒரத்தூர் வரை இந்தப் பாறைகளைக் காணலாம். இதிலிருந்து முற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் நேரிமலை பிளக்கப்பட்டு வெண்ணாற்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கல்லணைக் கால்வாயில் பூதலூரின் மேற்கே தொடங்கி தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பகுதி வரை 23 கி.மீ. தொலைவுக்கு உள்ள பாறைகள் நவீன இயந்திரங்களைக் கொண்டு பிளக்கப்பட்டு நீர் வழி உருவாக்கப்பட்டுள்ளது.

நற்றிணை, குறுந்தொகை பாடல்களாலும், சேந்தன் வெளியிட்ட காசுகளாலும், உ.வே.சா. மற்றும் சிவக்கொழுந்து தேசிகர் குறிப்புகளாலும் இப்பகுதியில் இருந்த மலை உடைக்கப்பட்டு வெண்ணாறு செல்வதை அறிய முடிகிறது.
நேரிமலை தற்போது வெண்ணாற்றின் போக்கில் கச்சமங்கலம், மாறனேரி, ஒரத்தூர் உள்ளிட்ட ஊர்களில் ஒரு காலத்தில் அமைந்திருந்த மலை. வெண்ணாறு ஓடிக்கொண்டிருக்கும் அம்மலையின் தரைமட்ட பகுதியை மட்டுமே இன்று காண முடிகிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி திருசடை முடிநாதர் கோயிலில் (சடையார் கோயில்) ரூ. 31.70 லட்சத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைப் பாதுகாப்பில் உள்ள இக்கோயில் தொல்லியல் நினைவுச் சின்னமாக உள்ளது. இக்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணைக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

அங்கு வந்து செல்கிற சுற்றுலா பயணிகள் திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடிநாதர் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் இப்பகுதி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகரன், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக் காப்பாட்சியர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி தினமணி 19.12.2014

No comments:

Post a Comment