Monday 5 May 2014

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் "சதயவிழா' தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம்

தஞ்சாவூர்: "ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து, சைவம் தழைக்க பாடுபட்ட அப்பர் பெருமானுக்கு, தஞ்சை அருகே ஒரு சிற்றூரில் அவர் முக்தி பெற்ற தினமான, சித்திரை சதய நாளில் இப்போதும் குருபூஜை நடப்பது வியப்புக்கும், பெருமைக்கும் உரிய தகவல்' என, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியுள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதரும், ஆய்வாளருமான மணிமாறன் கூறியதாவது:
மருள் நீக்கியார், தாண்டக வேந்தர் என, அப்பர் பெருமான் பல பெயரில் அழைக்கப்படுகிறார். வடக்கே திருவண்ணாமலையும், தெற்கே கொள்ளிடமும், கிழக்கே கடலும், மேற்கே மலைகளுமாக திருமுனைப்பாடி நாடு பரந்து விரிந்திருந்தது. இந்நாடு, சோழநாட்டுக்கும், தொண்டை நாட்டுக்கும் இடையில் இருந்ததால், நடுநாடு எனவும் அழைக்கப்பட்டது.

திருமுனைப்பாடி நாட்டை முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்கள் ஆண்டனர். அதனால், முனைப்பாடி என்னும் பெயர் வந்தது. திருவதிகையிலுள்ள மூன்றாம் நந்திவர்மன் மகன் நிருபதுங்கனின் 16ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில், முனைப்பேரரையர் முனையர்கோன் இளவரையன் என்னும் தொடர் உள்ளது. நடுநாட்டின் ஒரு பகுதிதான் முனைப்பாடி நாடு என, மற்றொரு கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.
சோழமன்னர்களில் ராசேந்திர சோழன் முதல் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டுக்களில் இந்நாடு குறித்து, குறிப்புகள் பல கிடைக்கிறது. இதன்படி, பலவகையிலும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டிலுள்ள ஒரு ஊர் தான் திருவாமூர்.
இங்கு, வேளாளர் சமூகத்தை சேர்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அப்பர் பெருமான். அப்பர் பெருமான் பாடியவை 4,5,6ம் திருமுறைகளாக தொகுத்தும், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு எனவும், சுந்தரர் பாடல்கள் திருப்பாட்டு எனவும் அழைக்கப்பட்டு, மூவர் பாடலும் தேவாரம் ஆனது.
நட்சத்திரங்களை கொண்டு, பிறந்தநாள் எடுப்பதும், மறைந்தோர் நினைவாக வழிபாடு செய்வதும் மரபாக முன் இருந்து வந்தது. தற்போதுதான் தேதியை கொண்டு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் நிலவுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன், தொண்டியில் சேரமன்னன் கோக்கோதை மார்பன் தன் பிறந்தநாளை சதய நட்சத்திரத்தில் கொண்டாடினார் என, பழம்பாடல் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன், தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜசோழன் (கி.பி.,985-1014) ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாடினார்.

சோழநாட்டை ஆண்ட ராஜராஜனுக்கு தஞ்சையில் மட்டும் தான் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால், அப்பர் பெருமானுக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் குருபூஜை விழா எடுக்கப்படுகிறது.

அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில், அப்பர் குருபூஜை விழா நடக்கிறது. பல்வேறு தலங்களுக்கு சென்று அப்பர் பெருமான் பாடியுள்ளார். அத்தலங்களில் விழா கொண்டாடுவது இயல்பு.

ஆனால், அப்பருக்கு எவ்வகையிலும் தொடர்பே இல்லாத, தஞ்சையை அடுத்துள்ள ஒரு சிற்றூரில் கடந்த 85 ஆண்டாக, குருபூஜை விழா நடப்பது வியப்புக்கும், பெருமைக்குரியது.

தஞ்சையில் இருந்து மேற்கே பூதலூர் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் மேலவெளி பஞ்.,க்கு உள்பட்ட களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இங்கு, குருபூஜை நாளில், 300 ஆண்டு பழமைவாய்ந்த அப்பர் ஓவியத்தை மலர்களை கொண்டு அலங்கரித்து, திருத்தேரில் அதை வைத்து கிராம மக்கள் தாமே முன்வந்து, வீதியுலாவை இப்போதும் நடத்துகின்றனர்.

இவ்வாறு, ஆய்வாளர் மணிமாறன் கூறினார்.