Tuesday 30 December 2014

கந்தர்வக்கோட்டை அருகில் சோழர் காலத்து நந்தி, சிவலிங்கம் தஞ்சை தமிழ்ப் பண்டிதர் தகவல்

தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில், நாட்டாணி கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சரஸ்வதி மஹால் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் கூறியதாவது:

தஞ்சையில், கோட்டைச்சுவரின், நீர் அரணாகத் திகழும் அகழியுடன் கூடிய கோநகரமாக திகழ்ந்தது வல்லம். வல்லத்தின் புறநகர் பகுதியாக விளங்கிய ஊர் நாட்டாணிம். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், வல்லத்தை கடந்து தென்புறமாக பிரிந்து செல்லும் சாலையில், நாட்டாணி உள்ளது. 

இவ்வூரின் மேற்கில் படத்தாளத்தியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திடலிலிருந்து, சில மீட்டர் தொலைவில், காட்டுப்பகுதிக்குள் சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் காணப்படுகிறது. அம்மன் கோவில் அருகே, சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இவையும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி, சங்க காலம் முதல், பிற்கால சோழர்களின் காலம் வரை மிகவும் சிறப்புற்று திகழ்ந்திருக்க வேண்டும். இங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் கோவில் முழுவதும் அழிவுற்று, இந்த நந்தியும், சிவலிங்கமும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 20.10.2014

Monday 29 December 2014

ஆதீண்டு குற்றி

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தன. இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வந்தனர். ஆடுகளை புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம், நல்லினம் என்றும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. அஃறிணை உயிர்களின் உணர்வினை மதித்து அவைகளுக்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லுக்கு தமிழ் இலக்கியத்தில் "ஆதீண்டு குற்றி' என்று பெயர் வழங்கப்பட்டது.

மனிதர்கள் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும்பொழுது கையால் சொறிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகளுக்குத் தினவு ஏற்படும்பொழுது அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவைப் போக்கிக்கொள்ள முற்படும். மாடுகள் அடிக்கடி உராய்வதால் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாகவும், அவ்வுயிர்களின் உணர்வினை மதிக்கும் விதமாகவும் தொல் பழங்காலந்தொட்டு, ஆடு, மாடுகள் தினவைப்போக்க பலகைக் கற்களையும், குத்துக்கற்களையும், மரக்கட்டைகளையும் நட்டுள்ளனர். இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இதற்காக நடப்படும் கற்களை ஆதீண்டு குற்றி, மாதீண்டு குற்றி என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. இன்று மாடுரசு கல் என அழைக்கப்படும் ஆதீண்டு குற்றி பற்றி இலக்கியங்கள் கூறுவதைக் காண்போம்.

சேந்தன் திவாகரத்தில், முப்பத்திரண்டு அறத்தின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. அவற்றுள் ஆவுரிஞ்சு நடுதறி அமைப்பது அறச்செயலாகப் போற்றப்படுகின்றது.
சீவக சிந்தாமணியின்,

பூத்த கோங்கு போற்பொன் சுமந்துளா
ராய்த்தியர் நலக்கா செறூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினன்

எனும் செய்யுளுக்கு உ.வே.சா., எழுதியுள்ள விசேடக் குறிப்பில், "கோங்க மலர்கள் பொன்னிறமுடையவை. ஆதீண்டு குற்றி தினவைப்போக்கிக் கொள்ளுதற் பொருட்டுப் பசுக்கள் உரிஞ்சுக் கொள்ளுதற்கு நாட்டப்பட்டுள்ள கட்டை' என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,


சதுக்கமுந் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண் தலைத்கொடியொடு மண்ணி யமைவர
(225-227)

இதன் பொருள் கூறுமிடத்து "கந்துடை நிலையினும் ஆதீண்டு குற்றியையுடைய இடத்திலும்' என்கின்றது. இதனையே தமிழ் லெக்சிகன் "கந்து' எனும் சொல் ஆதீண்டு குற்றியைக் குறிப்பதாகச் சொல்கின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வகை ஆதீண்டு குற்றிகள் வழக்கில் இருந்ததை உரையாசிரியர்களின் உரைக்குறிப்பால் அறியமுடிகின்றது.
ஆதீண்டு குற்றி பசுக்கள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்தாலும், பிற விலங்குகளும் உராய்ந்து கொள்ள பயன்பட்டது என்கிறார் சேனாவரையர் (தொல்,சொல். 49 மேற்கோள் உரை). சேனாவரையனாரின் உரைக்கு வலு சேர்ப்பது போல் ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக்கொண்டன என்பதை சங்க இலக்கியக் குறிப்புகளால் அறியமுடிகின்றது.

 குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
(ஐங்குறு.277:1-2)
 
விலங்குகள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்த கல் மாதீண்டு துறுகல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது தெரிய வருகின்றது. "ஆவுரிஞ்சு' என்னும் சொல்லாட்சி திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலத் தலமகிமைச் சருக்கத்தில் (37) குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருத்ததற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இக் கல்வெட்டுகளின் காலம் கி.பி.13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இதில் தன்மத்தறி என்றே ஆதீண்டு குற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் "தர்மத்திற்காக நடப்பட்டுள்ள கல்' என்பதாகும். இதனை நிறுவியவர்கள் பெயர்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாடுகள், யானைகள் போன்ற விலங்கினங்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் குட்டைகள் ஏற்படுத்தியிருந்தமை போன்று, மாடுகள் தங்கள் உடல் அரிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல் நட்டுள்ள முன்னோர்களின் மாண்பு போற்றுதலுக்கு உரியதன்றோ!


(மணி. மாறனின் "தமிழ் ஆய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து..)


நன்றி : தினமணி, தமிழ்மணி, 30.11.2014

பூதலூர் அருகே 10ம் நூற்றாண்டு சோழர் கால கோவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து, 25 கி.மீ., தொலைவில், பூதலூர் அருகில் அமைந்துள்ளது ஐம்பது மேல்அகரம். இங்கு, சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் ஆய்வு செய்த போது, பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இடிந்து போன கோவிலில் சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிற்பங்களைக் கண்டறிந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:
சோழர் காலத்தில், வளநாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய வீரசிகாமணி ஏரியின் வட கரையில், ஐம்பதுமேல் அகரம் அமைந்துள்ளது. பராந்தக சோழன் காலத்தில் இந்த ஏரியை, புத்தாமூர் கனகசேனப்பிடாரன் என்ற சமணப்பள்ளியைச் சேர்ந்தவர் பராமரித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் காலத்தில், அவரது படைத்தளபதியாக விளங்கிய ஜெயமூரி நாடாள்வான் என்பவர், இப்பெரும் ஏரியைப் பராமரிக்கும் அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற வீரசிகாமணி பேரேரி, இன்று பரப்பளவில் சுருங்கி, சிறு குளமாக காணப்படுகின்றது. மேலும், 15ம் நூற்றாண்டில் சாளுவத் திருமலைத்தேவ மகாராஜர் சோழ மண்டலத்தில், விஜயநகரப் பேரரசின் மகா மண்டலேஸ்வரராக இருந்தார். இவரது கல்வெட்டுகள் தஞ்சை, நாகை மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த சாசனம் சில கிராமங்களில் வசூலிக்கப்படும் வரியைத் தவிர்த்து, அவற்றை இறையிலி கிராமங்களாக அறிவித்ததைத் தெரிவிக்கிறது. ஐம்பதுமேல்அகரத்தில், கி.பி., 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய சிவாலயம் உள்ளது. காலபோக்கில் அழிவுற்று, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர், தனித்த சிவலிங்க பானம் போன்றவை காணப்படுகிறது. ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், நான்கடி உயரத்தில் வெள்ளை நிறக் கல்லில் அமைந்துள்ளது. விநாயகர் சிற்பம், மூன்றரையடி உயரத்தில், துதிக்கை சிதைந்த நிலையில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம், மிகவும் சிதிலமுற்ற நிலையில் கோவிலின் சுவர் அருகே கிடக்கிறது. கற்றளியாக இருந்த கோவில் அழிவுற்றதால், 15ம் நூற்றாண்டில் செங்கல் கட்டுமானமாகப் புதுப்பிக்கப்பட்டு, வழிபாட்டில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதுவும் இடிந்திருக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 26.11.2014

கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்

தஞ்சாவூரிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாகக் கல்லணைக்குச் செல்லும் வழியில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமையான தடுப்பணை அமைந்துள்ள கச்சமங்கலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இந்த அணையை வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் தெரிவித்தது:
இந்தப் பகுதியில் வெண்ணாறு 2000 ஆண்டுகளாக ஓடி வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் படகுகளில் ஏற்றப்பட்டு எள்ளுப்பொதிகள் கொண்டு செல்லப்பட்டதை வெண்ணுக்கரை எள்ளுப்பாறு எனத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெண்ணாற்றில் கச்சமங்கலம் என்ற ஊரில் இயற்கையாக அமைந்த மலையின் பாறை வெட்டப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவுக்குப் பாறைகள் வெட்டப்பட்ட வழியிலேயே வெண்ணாறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆற்றின் போக்கில் அமைந்த ஒரத்தூர் வரை இந்தப் பாறைகளைக் காணலாம். இதிலிருந்து முற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் நேரிமலை பிளக்கப்பட்டு வெண்ணாற்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கல்லணைக் கால்வாயில் பூதலூரின் மேற்கே தொடங்கி தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பகுதி வரை 23 கி.மீ. தொலைவுக்கு உள்ள பாறைகள் நவீன இயந்திரங்களைக் கொண்டு பிளக்கப்பட்டு நீர் வழி உருவாக்கப்பட்டுள்ளது.

நற்றிணை, குறுந்தொகை பாடல்களாலும், சேந்தன் வெளியிட்ட காசுகளாலும், உ.வே.சா. மற்றும் சிவக்கொழுந்து தேசிகர் குறிப்புகளாலும் இப்பகுதியில் இருந்த மலை உடைக்கப்பட்டு வெண்ணாறு செல்வதை அறிய முடிகிறது.
நேரிமலை தற்போது வெண்ணாற்றின் போக்கில் கச்சமங்கலம், மாறனேரி, ஒரத்தூர் உள்ளிட்ட ஊர்களில் ஒரு காலத்தில் அமைந்திருந்த மலை. வெண்ணாறு ஓடிக்கொண்டிருக்கும் அம்மலையின் தரைமட்ட பகுதியை மட்டுமே இன்று காண முடிகிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி திருசடை முடிநாதர் கோயிலில் (சடையார் கோயில்) ரூ. 31.70 லட்சத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைப் பாதுகாப்பில் உள்ள இக்கோயில் தொல்லியல் நினைவுச் சின்னமாக உள்ளது. இக்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணைக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

அங்கு வந்து செல்கிற சுற்றுலா பயணிகள் திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடிநாதர் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் இப்பகுதி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகரன், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக் காப்பாட்சியர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி தினமணி 19.12.2014