Friday 1 January 2016

தஞ்சாவூர் அருகே முற்கால சோழர் உறைகிணறு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் அருகே 2,000 ஆண்டு களுக்கு முற்பட்ட, முற்கால சோழர் சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைத்து நொறுக்கப்பட்டு, மண் குவியலானது.





தஞ்சை-திருவையாறு இடையே, அம்மன்பேட்டையிலி ருந்து, பனவெளி, தென்பெரம்பூர் செல்லும் சாலையில் உள்ளது நாகத்தி கிராமம். தஞ்சையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரின் நடுவில், ஊராட்சி அலுவலகம், சுப்பிரமணியர் கோயில் மற்றும் காளி கோயிலையொட்டி, பிரதமரின் மின் ஆளுகைத் திட்டத்தில், ரூ.17 லட்சம் மதிப்பில் பொது கணினி சேவை மையக் கட்டிடம் கட்டுவதற்காக குழிகள் தோண்டியபோது, சுடு மண் உறைகிணறு இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த வரலாற்று ஆய் வாளரும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதருமான மணி.மாறன், எஸ்.தேவதாஸ் ஆகியோர் கடந்த 25-ம் தேதி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

கள ஆய்வு குறித்து மணி.மாறன் கூறியது: கல்லணையை அமைத்த கரிகால் சோழன் வாழ்ந்த முற்காலச் சோழர்கள் காலத்திலேயே சிறப் பிடம் பெற்ற இந்தப் பகுதி ஆர்க்காட்டுக் கூற்றமாகும்.
நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில், சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஆர்க்காட்டுக் கூற்றத்தின் குறுநில மன்னர்களான, சேந்தன், அழிசி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இப்பகுதியில் அழிசிக்குடி என்ற ஊர் உள்ளது. இவர்கள் காலத்தில்தான் இக்கூற்றத்தின் கச்சமங்கலம் பகுதியில் வெண் ணாற்றின் குறுக்கே மலையைப் பிளந்து, தடுப்பணை அமைக்கப் பட்டது.

வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஆர்க்காட்டுக் கூற்றத்தில் அமைந் துள்ள நாகத்தி கிராமம் ‘நாகத்தீவு’ என்றும் அழைக்கப்பட்டது. நான்கு புறமும் நீரால் சூழப்பட்டு, தனித் தீவாகவே இந்த ஊர் இன்றும் உள்ளது. ஊரின் மேற்கே பனவெளி என் னும் பகுதியில் பிரியும் வெட்டாறு, நாகத்தியை நடுவில் கொண்டு கிழக்கே அம்மன்பேட்டைக்கு முன்னர் ஒன்று சேருகிறது. ஆற்றின் நடுவில் அமைந்த இப்பகுதி நாகம் படம் எடுப்பதுபோல அமைந்துள்ள தால் நாகத்தீவு என்று அழைக்கப் பட்டது. பல்லவர் காலத்திலும் இந்த ஊர் சிறப்பிடம் பெற்று விளங் கியது. இங்குள்ள அய்யனார் சிற்பம், தேவியுடன் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்து படைப்பாகும்.
இப்பகுதியில் கட்டிடம் கட்ட குழி தோண்டியபோது, சுமார் ஐந்தடி ஆழத்தில் சுடுமண் உறைகள் கொண்டு அமைக்கப்பட்ட உறை கிணறு காணப்பட்டது. உறைகிணறு கள் குறித்து சங்க நூல்களான பட்டினப்பாலையும், சிலப்பதிகார மும் குறிப்பிடுகின்றன.

இந்த உறைகிணறு, 2,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக உள்ளது. 60 செ.மீ. விட்டம், 40 செ.மீ. உயரம் கொண்ட சுடுமண் உறைகள் ஒன்றின் மீது ஒன்று செருகி அடுக்கப்பட்டு, கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 அடி உயரம் வரை காணப்பட்ட இந்த சுடுமண் உறை யின் உள் மற்றும் வெளிப்புறம் சிவப்பு நிறத்திலும், நடுப்பகுதி கருப்பு நிறத்திலும் காணப்படுகின் றது. இது, பண்டைத் தமிழரின் சிறந்த தொழில்நுட்பமாகும்.

உறைகிணற்றின் அருகிலேயே சிவப்பு நிறத்திலும், கருப்பு நிறத் திலும் செய்யப்பட்ட மண்கலங் களின் உடைந்த பாகங்களையும் காணமுடிந்தது. சில ஆண்டு களுக்கு முன்னர் இவ்வூரின் வேறொரு பகுதியில் வீடு கட்ட குழி தோண்டியபோது, எலும்பு களுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இக்கிணறு, அருகில் ஓடும் வெட்டாற்றின் கரையிலிருந்து சுமார் 300 அடி தூரத்தில் உள்ளது. இதேபோன்ற உறைகிணறுகள் ஆர்க்காட்டுக் கூற்றத்தில் அமைந்த வரகூர், தாழக்குடி, கொண்டவிட் டான்திடல் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆர்க்காட்டுக் கூற்றம் முழுவதையும் கள ஆய்வு செய்தால், பல்வேறு புதிய வரலாற் றுத் தகவல்களை வெளிக்கொணர முடியும்” என்றார்.

அரசு அலுவலர்களின் அலட்சியம்
இதுகுறித்து நேரில் அறிவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றபோது, அங்கு உறைகிணறு இருந்ததற்கான சுவடே இல்லாமல் காணப் பட்டது. மணி.மாறன் குழுவினர் இந்த உறைகிணற்றைப் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துச் சென்ற சில மணி நேரத்தில், அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அலுவலர்கள் வந்துள்ளனர்.
இந்த உறைகிணற்றில் புதையல் இருப்பதாக தகவல் கிடைத்ததாகக் கூறி, அந்தக் கிணற்றைச் சுற்றி ஆட்களையும், பின்னர் பொக்லைன் இயந்திரத்தையும் கொண்டு தோண்டச் செய்ததாகவும், சுமார் 15 அடி ஆழம் வரை உறைகிணறு இருந்ததாகவும், ஆனால் அவை உடைந்து சுக்குநூறாக நொறுங்கிவிட்டதாகவும், அவற்றை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது, “யாரோ ஒருவர் புதையல் இருப்பதாகக் கூறினார் என்பதற்காக, பாதுகாக்கப்பட வேண்டியதும், மிகவும் கவனமாகக் கையாள வேண்டியதுமான தொல்லியல் சின்னத்தை, துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை மற்றும் உதவி ஏதுமின்றி அவசர கோலத்தில் உடைத்துள்ளனர்” என்று வேதனை தெரிவித்தனர்.
-தி இந்து
----------------------------------------------------------
அண்மையில் நாகத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. அவற்றை வெளியிட்ட இதழ்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தினத்தந்தி, 27.12.2015
தினகரன், 27.12.2015
தினமலர், 27.12.2015
தினமணி, 27.12.2015
மாலை மலர், 27.12.2015
தமிழ் முரசு, 27.12.2015
தி இந்து, 28.12.2015 
The New Indian Express. 28.12.2015  
----------------------------------------------------------

No comments:

Post a Comment