Tuesday 11 October 2016

தமிழரின் தொன்மை வரலாறு கூறும் கீழடி

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை உலக வரலாறு, தொல்லியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதனை வெளிப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழந்தமிழரின் வரலாற்று எச்சங்கள் மிகுந்து காணப்படுகின்றன. நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடலியல் ஆய்வுகளிலும் தமிழர்தம் தொன்மங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. மிகப்பெருமளவில் முழுவதுமாக ஆய்வு மேற்கொள்ள வரலாறு, தொல்லியல், நாணயவியல், வேதியியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்ட முறையான குழு அமைத்து பரந்துபட்ட ஆய்வினை மேற்கொள்ளும்பொழுது பண்டைத் தமிழரின் முழுமையான வரலாற்றினை உலகறியச் செய்யமுடியும்.

இன்றும்கூட கீழ்த்திசை நாடுகளிலும், சீன நாட்டிலும் தமிழரின் தொன்மங்கள் விரவிக்கிடக்கின்றன. பூம்புகார் கடல் அகழாய்வில் சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட நாகரிகத்துடன் திகழ்ந்த கட்டுமானங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டன. பூம்புகாரில் நிலப்பகுதியில் நீர் வெளியேற்றும் தூம்பு கண்டறியப்பட்டது. சுடப்பட்ட அகலமான செங்கற்கள் கொண்டு கட்டுமானப் பகுதி திகழ்ந்தது.









அண்மையில் சிவகங்கை மாவட்டம் மதுரை அருகில் உள்ள கீழடிப் பகுதியில் மத்தியத் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏறத்தாழ 2500இலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதையுண்ட நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. 11.10.2016 அன்று தொல்லியல், வரலாறு துறை சார்ந்த நண்பர்களுடன் இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டோம். இதிலிருந்து இங்குள்ள கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ள செங்கல்லின் அமைப்பானது புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்க காலத்து கோட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கற்களின் அமைப்பினை ஒத்துத் திகழ்வதைக் காணமுடிந்தது. இதுபோன்ற செங்கல்லே பூம்புகார் அகழாய்விலும் கிடைத்தது.





மேலும் பயன்படுத்தியிருந்த எலும்பாலான ஆயுதங்கள், சிவப்பு கருப்பு நிறத்தில் அமைந்த பானை ஓடுகள், உறைகிணறுகள் இவைகளையும் ஆய்ந்து நோக்கும்போது இவற்றின் தொன்மை நன்கு விளங்குகின்றது. 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் இந்நகரம் திகழ்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வு நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் ஒரு தொழிலகம் இயங்கியதற்கான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் சிறு கால்வாய் வழியாக அடுத்த தொட்டிக்கு நீர் செல்லுமாறு அமைக்கப்பட்டு இறுதியாக ஒரு பெரிய கால்வாய் வழியாக முழு நீரும் வெளியேறி ஆற்றில் கலக்கும்படி அமைந்துள்ள அமைப்பினைக் காணமுடிகின்றது. இத்தொழிலகம் சாயத்தொழில் நடைபெற்ற இடமாகவோ அல்லது ஆயுதங்கள், அணிகலன்கள் செய்யப்பெற்ற தொழிலமாகவோ இணைந்திருக்கக் கூடலாம்.

உறைகிணற்று சுடுமண் உறையானது பழந்தமிழனின் தொழில்நுட்பத் திறனை அறிய முடிகிறது. நெல் கருக்காயினை சேற்றில் குழைத்து அமைத்து அதன் மேல் புறமும், அடிப்புறமும் சாதாரண சேற்றினைக் குழைத்து நெருப்பில் சுட்டு எடுக்கப்படும் உறையினை பழந்தமிழகத்தில் கிணறு கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வுறையானது இரு புறமும் சிவப்பு நிறத்திலும், நடுமையப்பகுதி கருமையாகவும் அமைந்திருக்கும். இத்தகு உறைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அதோடன்றி பானை ஓடுகள் பழந்தமிழ் எழுத்தமைதியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பானையோட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பினை இந்தியத் தொல்லியல் துறை அமைத்துள்ள புகைப்படத்தில் சேந்தன் அவதி என்று எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க நூல்களான நற்றிணை மற்றும் குறுந்தொகையில் சேந்தன் அழிசி என்ற மன்னனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சங்க காலத்திற்கு முன்னர் பயன்பட்ட நாணயத்திலும் சேந்தன் அழிசி பெயர் பொறிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேந்தன் அழிசியே இப்பானையோட்டில் சேந்தன் அவதி என குறிப்பிட்டிருக்கலாமோ என்றும் கருத இடமுண்டு. இவைகளை வைத்துப் பார்க்கும்போது சங்க காலத்தில் பேசப்பட்ட குறுநில அரசனின் பெயர் கொண்ட பானை ஓடு இங்கு கிடைத்துள்ளது சிறப்பானதாக அமைந்துள்ளது.


இவ்வளவு சிறப்பு கொண்ட தொல் தமிழரின் தொன்மை நாகரிகத்தை காட்டக்கூடிய இப்பகுதியினை அரசு கையகப்படுத்தி முழுமையான ஓர் ஆய்வினை மேற்கொண்டு இன்னும் பல வரலாற்று எச்சங்களை வெளிவுலகிற்குக் கொண்டுவருவதோடு ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளை அதே நிலையில் மேற்கூரையமைத்து தொடர்ந்து பராமரித்தால் தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றை அறியவும் எதிர்கால சமுதாயத்திற்குக் கொண்டு செல்லவும் பயன்படும் என்பதைத் தெரிவிப்பதோடு அரசோடு இணைந்து பாதுகாப்பு பணியில் மக்களும் முழு உணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டு தமிழர்தம் பெருமையை பாதுகாப்போம். 

நன்றி : தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 16-31, 2016


6 comments:

  1. உங்களால் இக்குழுவில் நானும் கலந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இவ்விடம் பாதுகாக்கப்படவேண்டும். அதுவே தமிழுலகிற்கு நாம் செய்யும் அரிய பணியாகும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லியிருக்கவிட்டால் ஒரு நல்ல வாய்ப்பையும் பல தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் அறிமுகமும் கிடைத்திருக்காது...தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை. போனோம் பார்த்தோம் படமெடுத்தோம் திரும்பினோம் என்றில்லாமல் நாமும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது..நன்றி.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வெதெல்லாம் உண்மை.media மூலமாக அரசின் கவனத்தை ஈர்த்து நிறைய செய்யவேண்டியுள்ளது ..குழந்தையை ASI பெற்று கொடுத்து விட்டது..நாம்தான் வளர்க்கவேண்டும்.. உங்கள் குழுவில் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஆகா,தாங்கள் வலைப் பூவில் இருப்பது இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது ஐயா
    இன்றுதான் அறிந்தேன்
    இனி தொடர்வேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. தமிழ்நாடு தற்போதைய தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பாக கொடுமணல் , ஆதிச்சநல்லூர் எல்லாம் ஏமாற்று வேலையே நடக்கிறது. மணலூர் அகழாய்வு நடக்கவில்லை. போதிய விழிப்புணர்வு அக்கறை இல்லாத தில்லுமுல்லுகள் அரங்கேற்றம் கேற்க ஆளில்லை

    ReplyDelete